Limitless customization options & Elementor compatibility let anyone create a beautiful website with Valiance.

Contact info

Shiloh, Hawaii 81063 +1-212-9876543 info1234@gmail.com Office Hours: 8AM - 5PM Sunday - Weekend Day

அது ஒரு அதிகாலை முழுமையாக விழிக்காத நேரம்.

பனித்துளிகள் காற்றில் மெதுவாக மிதந்துகொண்டிருந்தன. அந்த அமைதியான நேரத்தில் நாங்கள் கம்பத்ராயன் கிரி மலை அடிவாரத்தை நோக்கி எங்கள் நடை பயணத்தை  தொடங்கினோம். இது ஒரு சாதாரண நடை பயணம் அல்ல. அழிந்துவரும் நமது காடுகளை மீட்டெடுக்க நாட்டு விதைகளை தேடும் பயணம். இந்தப் பயணத்தில் தமிழ்நாடு வனத்துறையுடன் இணைந்து அவர்களின் சரியான வழிகாட்டுதலுடன் BCT (Biodiversity Conservation Trust) சார்பில் சகோதரர் நந்தகுமார் தலைமையில் 25 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். இயற்கையை மீட்டெடுப்பது ஒரு கனவாக இருந்தால், அதை நனவாக்கும் வேலையை செய்வதில் தன்னார்வலர்கள் முக்கிய பங்கு வகுத்து வருகின்றனர்

அன்று காலை 9 மணிக்கு எங்கள் நடைபயணம் ஆரம்பமானது. முதல் பாதை எளிமையாக இருந்தது. கீழே உலர்ந்த சருகுகள் எழுப்பும் மெல்லிய சத்தமும், கண்ணைக்கவரும் வண்ணங்கள் கொண்ட பறவைகளின் இசையும், பூச்சிகளின் சத்தமும், மரங்களின் நிழலும் எங்களை அரவணைத்ததைப் போல் உணர்ந்தேன். 

கிழக்கு தொடர்ச்சி மலைகள் எப்போதும் ஒரு மர்மத்தை தாங்கி நிற்கின்றன.பெருமை பேசப்படாத மலைகளில் இம்மலையும் ஒன்று. 1,699m உயரத்தில் கம்பீரமாக தலை நிமிர்ந்து தன்னை தானே உணர்ந்து கொண்டிருந்தது. இயற்கையை ரசித்தவாறு நடந்து கொண்டிருக்கையில் சுமார் 10:30 மணிக்கு வானிலையில் மாற்றம் நிலவியது. கருமேகங்கள் சூழ மழை ஜோவென பொழிய ஆரம்பித்தது. மழை பிடிக்காதவர்கள் இருப்பார்களா ? அனைவருக்கும் ஒரு நொடி மிக்க மகிழ்ச்சியாக இருந்தாலும் அடுத்த நொடி மழை ஏற்றம் கடினமாக இருக்குமே என்ற எண்ணம் சூழ்ந்தது. மழைத்துளிகள் புல்களின் மீது விழ மண் வாசனை காற்றில் பரவியது. வளமான மண் வாசனை மனதை கொஞ்சம் வலுவாக்கியது. மலையின் பாதைகள் ஈரமாகின. பாறைகள் வழுக்கலானது. நடை ஏறுவது தாமதமானது. மழை அந்த பயணத்தை கடினமாக்கியது. ஆனால் அதே நேரத்தில் அந்த மலையின் உயிரையும் உணர வைத்தது. விதைகளை சேகரித்து காடுகளை மீட்டெடுக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு நிக்காமல் மலையேறிக்கொண்டே இருந்தோம். 

மதியம் 12 மணிக்கு மலையின் உச்சியை நாங்கள் அடைய காத்திருந்தது அப்படி ஒரு அழகான இயற்கை அன்னையின் காட்சி. கண்ணுக்கு எட்டிய தூரம் முழுவதும் பச்சை நிறம் சூழ்ந்த அடர்ந்த புல்வெளி. 

புற்களின் உயரம் சுமார் 7 அடி இருந்தது. அந்த அடர்ந்த புல்வெளியில் நாங்கள் அனைவரும் கடலில் விழுந்த கற்களைப்போல் காணாமல் போய்விட்டோம். வானம் பொழிந்த மழையினை பஞ்சு போல் உறுஞ்சி, புற்களின் வேர்கள் அதை சேமித்து,  பத்திரப்படுத்தி,  ஊற்றாக மாறி பின்பு ஓடையாக காடுகளுக்குள் ஓடி, காடுகளையும், காடுகளை சார்ந்து வாழும் உயிரினங்களையும் உயிர்ப்பித்து பின்பு பிரம்மாண்டமான ஆறாக உருவெடுக்க இந்த புல்வெளி காடு செய்யும் வேலைகளை கண்கூட கண்டத்தில் புல்லரித்துப்போனோம். பல்லுயிர் பாதுகாப்பில் புல்வெளி காடுகளின் முக்கியத்துவத்தை இயற்கையோடு ஒன்றி பயணிக்கோம் பொழுதே நாம் அதை உணரமுடிகிறது. 

நேரம் சென்று கொண்டே இருக்க வந்த வேலையை ஆரம்பிப்போம் என்று நன்றாக முதிர்ந்த விதைகளை சேகரிக்க தொடங்கினோம். மழை நிற்காமல் பொழிந்து கொண்டிருந்ததால் புல் விதைகளை சேகரிப்பதும் சற்று கடினமாக இருந்தது. விடா முயற்சியுடன் 17  மூட்டைகளுக்கு மேல் சேகரித்தோம். ஒவ்வொரு மூட்டையும் 25 கிலோவுக்கு மேல் இருந்தது. 

சேகரித்த விதைகளை இப்போது கீழே எடுத்து செல்ல வேண்டும். மன உறுதியுடன் சேர்ந்து இப்போது உடல் பலம் மிக முக்கியம். விதை மூட்டைகளை தோலில் தூக்கி வைத்துக்கொண்டு பொறுமையாக மலையில் இருந்து கீழே இறங்க தொடங்கினோம். “ஏண்டா ஜீன்ஸ் பாண்ட் அணித்துவந்தேன்” என்று வெறுத்த நாள் அன்று. மாலை 5 மணிக்கு நாங்கள் மீண்டும் மலை அடிவாரத்தை வந்தடைந்தோம்.

எங்கள் உடல்கள் சோர்வாக இருந்தது. ஆனால் எங்கள் மனம் நிறைந்திருந்தது. ஏனெனில் அந்த மூட்டைகளில் இருந்தது வெறும் விதைகள் அல்ல. அவை ஒரு நிலத்தின் நினைவுகள். ஒரு புல்வெளியின் மரபு. ஒரு காட்டின் எதிர்காலம். காடுகளை மீட்டெடுப்பது சுலபமான செயல் அல்ல. ஒரு நாள் அந்த விதைகள் ஒரு புல்வெளியாகும். அந்த புல்வெளி ஒரு காட்டை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் கொண்டு வந்த விதைகளை உலர்த்தி விதைகள் சேமிப்பு கிடங்கில் வைத்துவிட்டு அந்நிய தாவரங்கள் அகற்றப்பட்ட இடங்களில் விதைக்க சரியான காலகட்டத்துக்காக காத்திருந்தோம்.

Article by S. Suresh, BCT Team

Leave A Comment