Limitless customization options & Elementor compatibility let anyone create a beautiful website with Valiance.

Contact info

Shiloh, Hawaii 81063 +1-212-9876543 info1234@gmail.com Office Hours: 8AM - 5PM Sunday - Weekend Day

நான் தரணி மதிவாணன் இறையமங்கலம் எனும் கிராமத்தில் ஒரு சிறிய பெண்ணாக இருந்த காலத்திலிருந்தே இயற்கை, விலங்குகள், ஆடு, மாடு, நாய் என்றாலே எனக்கு ஒரு தனி பாசம். சின்ன வயதிலேயே தோட்டங்கள், குளிர்ந்த காற்று, மரங்களின் நடுவில் வளர்ந்ததாலோ என்னவோ, நானே தெரியாமல் இயற்கையோடு ஒன்றாக பழகி வளர்ந்துவிட்டேன்.

எங்கள் வீடு விவசாய பூமியின் நடுவில் இருக்கும். வீட்டை சுற்றி பசுமையானா நிலங்கள், மரங்கள், காற்று வீட்டின் வாசலில் நின்று பார்த்தாலே தூரத்தில் ஓடும் ஆறும் தெரியும். அதுதான் என் வாழ்க்கையாகவே இருந்தது. நான்கு சுவர்களுக்குள் ஒரு நாள் முழுக்க இருக்க சொன்னால், என்னால் ஒரு நிமிடம்கூட இருக்க முடியாது. அந்த சூழலில் வளர்ந்ததால்தான் இயற்கை எனக்கு ஒரு இடம் இல்லை, என் வாழ்க்கையாகவே ஆகிவிட்டது.

அங்கே மனிதர்களை விட கிளி, மயில், காகம், குருவி, முயல், ஆடு, மாடு இவங்க தான் அதிகம். எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் மரங்களில் கிளி குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்களின் சத்தம் கேட்டுத்தான் நான் பல காலைகளில் எழுந்திருக்கிறேன். மதிய நேரங்களில் என் அறையின் ஜன்னலருகே அமர்ந்து அவர்களை ரசித்து பார்க்கும் பழக்கம் எனக்கு இருந்தது. ஒன்றோடொன்று கத்திக்கொண்டு, கொஞ்சிக்கொண்டு, சுதந்திரமாக சுற்றித்திரியும் அந்த கிளிகளை பார்த்துக்கொண்டே நேரம் போவது கூட தெரியாது. அந்த சிறிய தருணங்கள் தான் இயற்கையோடு எனக்கு இன்னும் ஆழமான ஒரு இணைப்பை உருவாக்கின. அவர்களுக்கு உணவாக வாழைப்பழம், கொய்யா, மாம்பழம், பப்பாளி போன்ற பழங்கள் அங்கே எப்போதும் இருக்கும்.
பள்ளி, கல்லூரி முடிந்து வேலைக்கு சென்ற பிறகு வாழ்க்கை கொஞ்சம் வேகமாக மாறிவிட்டது. அந்த நேரத்தில்தான் BCT குழுவோடு சேர்ந்து காட்டிற்காக சில வேலைகளை செய்ய ஆரம்பித்தேன். மனசுக்காகவாவது, வாரத்துக்கு ஒருமுறை இல்லையெனில் மாதத்துக்கு ஒருமுறையாவது காடு, விலங்குகள், இயற்கைக்காக வேலை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தேன். M.E Environmental Engineering படித்துளேன், புத்தகங்களில் படித்த conservation, biodiversity, ecology போன்ற விஷயங்கள் field-ல் வேலை செய்யும்போது முற்றிலும் வேறு மாதிரி இருப்பது அப்போதுதான் புரிந்தது.

BCT founder நந்தகுமார் அண்ணாவுடனும், அவருடைய மனைவி லக்ஷ்மி உடையாள் அண்ணியுடனும் சேர்ந்து காட்டிற்காக பல வேலைகளில் பங்கேற்றபோது, காடு தினமும் ஒரு புதிய learning கொடுக்கிறது என்பதை உணர்ந்தேன்.
அவர்கள் எனக்கு கொடுத்த support காரணமாக நிறைய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவங்கள்தான் வாழ்க்கையை வேறு கோணத்தில் பார்க்க கற்றுக்கொடுத்தது. கீழே இருக்கும் உலகத்தில் மனிதர்களின் பிரச்சனைகள் அதிகமாக தெரியும். ஆனால் மலைக்கு மேலே போனால் அமைதி, காற்று, விலங்குகள், புதிய கதைகள், புதிய learning கிடைக்கும். அங்கே போகும்போது நாம் நாமாகவே இருக்க முடியும். அப்படித்தான் என் BCT பயணம் ஆரம்பித்தது.

அந்த பயணங்களில் எனக்கு மனசுக்குள் ஆழமாக பதிந்த ஒரு இடம் — தெங்குமரஹடா.

தெங்குமரஹடா பயண நாள் அதிகாலைதான் ஆரம்பித்தது. எங்கள் ஊரிலிருந்து இரவு 3 மணிக்கே கிளம்பினேன். ஒரு மணி நேர பயணத்துக்கு பிறகு ஈரோட்டை அடைந்து, அங்கிருந்து பேருந்தில் சத்தியமங்கலம் சென்றேன். காலை 7 மணியளவில் BCT குழுவோடு சேர்ந்து தெங்குமரஹடா நோக்கி பயணம் தொடங்கியது.
நகர சத்தங்கள் மெதுவாக மறைந்து, தார் சாலை மண் பாதையாக மாற ஆரம்பித்தது. காடு ஒரே நேரத்தில் தன்னை காட்டவில்லை. மான்கள் சில விநாடிகளில் தோன்றி மறைந்தன. பறவைகளின் சத்தம் காற்றோடு கலந்தது. அருகில் அமைதியாக ஓடிய மாயாறு, “அவசரம் இல்லாத வாழ்க்கையும் இருக்கிறது” என்று சொல்லும் மாதிரி இருந்தது. அந்த நேரத்தில் நந்தகுமார் அண்ணா, “இந்த பாதையில்தான் ஒரு காலத்தில் திப்பு சுல்தான் படையுடன் சென்றதாக சொல்வார்கள்” என்று கூறிக்கொண்டே வந்தார். தூரத்தில் வெள்ளை நிற மேற்பரப்புடன் ஒரு அழகான மலை தெரிந்தது. அதை காட்டி, “அது அல்லி ராணி மலை.
திப்பு சுல்தான் படையுடன் வரும்போது அல்லி ராணி அங்கே பாதுகாப்பாக தங்கியிருந்ததாக இங்குள்ள மக்கள் சொல்லுவார்கள்,” என்று பல கதைகளை பகிர்ந்துகொண்டே வந்தார்.

சிறிது நேரத்தில் மாயாற்றை அடைந்தோம். இரு பகுதிகளை பிரித்து நடுவே அழகாக சிரித்துக்கொண்டு ஓடும் குழந்தையைப் போல அந்த ஆறு அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது. கரையோரங்களில் பல பழமையான சுவடுகள் இருந்தன. அவை பல கதைகளை மனதில் தோன்றவைக்கும் விதமாக இருந்தது. அங்குள்ள மக்கள் இன்னும் அந்த இடங்களை ஒரு புனிதமான நினைவாக மதித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

அதை கடந்த பிறகுதான் தெங்குமரஹடா கிராமம் தெரிந்தது. பாலம் இல்லை. பெரிய கட்டிடங்கள் இல்லை. ஒரு சிறிய படகில் மாயாற்றை கடந்துதான் அந்த கிராமத்தை அடைய முடியும்.

ஊருக்குள் நுழையும்போதே, சுமார் 500 வருடங்கள் பழமையான ஒரு பெரிய மரம் எங்களை வரவேற்றது. பல தலைமுறைகளை பார்த்து நின்ற அந்த மரம், அந்த கிராமத்தின் நினைவுகளையே தன்னுள் சுமந்துகொண்டிருப்பது போல இருந்தது. அதன் கிளைகள் வானத்தை தொட்டபடி விரிந்திருந்தன. அதன் நிழலில் நின்றபோது, காலம் மெதுவாக நகரும் உணர்வு வந்தது.

ஆனாலும் அங்கே இருந்த அமைதி, நகரங்களில் எங்கும் கிடைக்காத ஒன்று. குழந்தைகள் சுதந்திரமாக ஓடினார்கள். விவசாயிகள் மெதுவாக வேலை செய்தார்கள். ஊரின் நடுவில் உயரமாக ஒரு கோவில் இருந்தது. அதை சுற்றி சிறிய சிறிய பழைய வீடுகள் அமைதியாக நின்றுகொண்டிருந்தன. அந்த கிராமத்தை சுற்றி, காவல்காரர்களைப் போல மலைகள் உயரமாக நிமிர்ந்து நின்றன. காற்று, மண், மக்கள், விலங்குகள் எல்லாமே இயற்கையோடு சேர்ந்து வாழும் ஒரு வாழ்க்கையை அங்கே இன்னும் காப்பாற்றிக்கொண்டிருந்தது.

அருகில் ஒரு பழைய சேமிப்பு கிடங்கு, பழைய தபால் நிலையம் இன்னும் அமைதியாக நின்றுகொண்டிருந்தன. ஒரு காலத்தில் எத்தனை மனிதர்களின் செய்திகளையும், உணர்வுகளையும் தாங்கி சென்றிருக்கும் அந்த இடங்கள், இப்போது ஒரு நினைவாக மட்டும் இருந்தன. சிறிய பெட்டிக்கடைகள், பழைய வீடுகள், மெதுவாக நகரும் வாழ்க்கை. இவை எல்லாம் சேர்ந்து அந்த கிராமத்தை ஒரு கதையாக மாற்றியிருந்தன.

அன்று நாங்கள் மாயாறு அருகிலுள்ள பகுதியில் 300 மரக்கன்றுகளை நட்டோம். மண் ஈரமாக இருந்தது. காற்று அமைதியாக இருந்தது.
வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென்று நந்தா அண்ணா, “தரணி… இங்க வா சீக்கிரம்!” என்று அழைத்தார். நான் அருகே சென்றபோது மண்ணில் ஆழமாக பதிந்திருந்த ஒரு பெரிய காலடிச் சுவட்டை காட்டி, “இது யாருடைய சுவடு தெரியுமா?” என்று கேட்டார்.

அந்த நொடியில் தான் புரிந்தது. ஒரு பெரிய யானை சில நிமிடங்களுக்கு முன்புதான் அங்கே வந்து தண்ணீர் குடித்து, யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக தனது வழியில் சென்றிருக்கிறது. அந்த சுவட்டை பார்த்தபோது ஒரு விஷயம் மனதில் பலமாக பட்டது. எவ்வளவு பிரம்மாண்டமான உயிர் அது. ஆனால் எந்த சத்தமும் இல்லை. எந்த ஆவேசமும் இல்லை. தனது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு அமைதியாக சென்றுவிட்டது.

அதே இடத்தில் மனிதர்கள் இருந்திருந்தால்? கத்தல், ஆர்ப்பரிப்பு, unnecessary disturbance — எல்லாம் இருந்திருக்கும். பிறகு ஏதாவது நடந்தால், “அது மனிதர்களை தாக்கியது” என்று சொல்வார்கள்.
ஆனால் அந்த யானை அப்படி இல்லை. அது நம்மை தொந்தரவு செய்யவில்லை. நாம்தான் அவற்றின் உலகத்திற்குள் சென்று கொண்டிருக்கிறோம் என்பதுதான் அப்போது இன்னும் ஆழமாக புரிந்தது.

மாலை நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. அதனால் பல பறவைகள் தங்களுடைய கூடுகளுக்கு திரும்பிக்கொண்டிருந்தன. தூரத்தில் காட்டெருமைகள், சாம்பார் மான்கள் அமைதியாக நகர்ந்துகொண்டிருந்தன. சில நேரங்களில் மரங்கள் “சட சட” என்று அசைந்த சத்தம் கேட்டது. அந்த ஒவ்வொரு சத்தத்திற்கும் பின்னால் ஒரு உயிர், ஒரு கதை இருப்பது போல இருந்தது.
அந்த நேரங்களில் நந்தகுமார் அண்ணா பகிர்ந்த அனுபவங்களும், கதைகளும் அந்த காடை இன்னும் உயிரோட்டமாக உணர வைத்தது.
மாலை நேரத்தில் ஆற்றங்கரையில் அமர்ந்து காற்றை உணர்ந்த அந்த சில நிமிடங்கள் இன்னும் மனதில் இருக்கின்றன. காடு எதையும் பேசவில்லை.
ஆனால் நிறைய விஷயங்களை உணர வைத்தது. அந்த நாள் முடிந்து திரும்பும்போது, நான் ஒரு இடத்திலிருந்து மட்டும் திரும்பவில்லை. இயற்கையோடு இன்னும் ஆழமான ஒரு இணைப்போடு திரும்பினேன்.

அதனால்தான் தெங்குமரஹடா எனக்கு ஒரு சாதாரண பயணம் இல்லை… என் உயிரோடு கலந்த ஒரு கதை .

சுற்றுச்சூழல் முக்கியத்துவம் – சில உண்மைகள்:

  1. 300 மரக்கன்றுகள் வளர்ந்த பிறகு உண்டாகும் ஆக்ஸிஜன் ஒரு முழுமை வளர்ந்த மரம் வருடத்திற்கு சுமார் 100–120 கிலலோ ஆக்ஸிஜன் வெளியிடும் என்று கூறப்படுகிறது. அதன்படி 300 மரங்கள் வளர்ந்த பிறகு, ஆயிரக்கணக்கான கிலோ ஆக்ஸிஜனை உருவாக்கி பல மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் சுத்தமான காற்றை வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும்.
  2. கார்பன் உறிஞ்சும் திறன் ஒரு வளர்ந்த மரம் வருடத்திற்கு சராசரியாக 20–25 கிலலோ வரை கார்பன்டையாக்ஸைடை உறிஞ்சும். 300 மரங்கள் சேர்ந்து வருடத்திற்கு பல டன் அளவிலான கார்பனை உறிஞ்சி, climate change தாக்கத்தை குறைக்க உதவும்.
  3. விலங்குகளுக்கான பாதுகாப்பு மற்றும் உணவு மரங்கள் மனிதர்களுக்காக மட்டும் அல்ல. பறவைகள் கூடுகட்ட, யானைகள் ஓய்வெடுக்க, முயல்கள் மறைய, பூச்சிகள் வாழ — ஒரு முழு ecosystem-ஐ மரங்கள் தாங்கிக்ககொண்டு நிற்கின்றன. ஒரு மரம் வளர்வது என்பது நூற்றுக்கணக்கான உயிர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை உருவாகுவது போன்றது.
  4. மண் மற்றும் நீர் பாதுகாப்பு மரங்களின் வே வே ர் மண்ணை இறுக்கமாக பிடித்துக்ககொள்வதால் மண் அரிப்பு குறையும். மழை நீரை நிலத்துக்குள் சேமிக்க உதவுவதால், ஆறுகள் மற்றும் நிலத்தடி நீர் நீண்ட காலம் பாதுகாக்கப்படும். மாயாறு போன்ற ஆறுகளின் உயிர் வாழ்வுக்கும் இதுபபோன்ற காடு பாதுகாப்பு மிகவும் அவசியம்.
  5. வெப்பநிலை குறைப்பு மற்றும் அமைதியான சூழல் காடு இருக்கும் இடங்களில் வெப்பநிலை இயற்கையாகவே குறைவாக இருக்கும். மரங்கள் நிழல் தருவது மட்டுமல்லாமல், காற்றை சுத்தப்படுத்தி சுற்றுப்புற சூழலை அமைதியாக வைத்திருக்க உதவுகின்றன. அதனால்தான் காடுகளுக்குள் செ சென்றவுடன் மன அழுத்தம் குறைந்து, ஒரு வித அமைதி உணர முடிகிறது.

————————————————–தரணி மதிவாணன் [BIODIVERSITY CONSERVATION TRUST VOLUNTEER]

Leave A Comment