
இளம்பாரதி பத்மநாபனின் BCT உடனான இயற்கைப் பயணம்
நான் இளம்பாரதி பத்மநாபன், திருப்பூரைச் சேர்ந்தவன். சிறுவயதிலிருந்தே இயற்கை மீது எனக்கு ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. மரங்கள், மலைகள், மழை, பறவைகள், வனவிலங்குகள் என இயற்கையோடு தொடர்புடைய எதுவாக இருந்தாலும் அது என்னை எப்போதும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. இன்று Biodiversity Conservation Trust (BCT) அமைப்பில் தன்னார்வலனாக பணியாற்றி வருகிறேன். ஆனால் உண்மையில் இது ஒரு volunteer work மட்டுமல்ல; என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது.
BCT பற்றி எனக்கு முதன்முதலில் தெரிந்தது Instagram வழியாகத்தான். இன்று நம் தலைமுறை சுற்றி என்ன நடக்கிறது என்பதை நேரில் பார்ப்பதை விட கைப்பேசி திரையின் வழியாக அதிகம் பார்க்கிறது. நானும் இயற்கை மற்றும் விலங்குகள் பற்றிய வீடியோக்களை அடிக்கடி பார்ப்பவன். அப்படித்தான் ஒரு நாள் BCT Founder நந்தகுமார் அண்ணாவின் ஒரு வீடியோ என் கண்களில் பட்டது. ஒரு பழங்குடியினர் கிராமத்தில் சில சிறிய குழந்தைகள், தங்களிடம் இருந்த பழங்களை வாங்கிக்கொள்ளுமாறு அவரிடம் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர் அந்த பழங்களை வாங்கியதோடு மட்டுமல்லாமல் அவர்கள் கேட்ட தொகையை விட அதிகமான பணத்தையும் கொடுத்தார். ஆனால் அந்தக் குழந்தைகள் அதைப் பெற்றுக்கொண்டு இன்னும் மகிழ்ச்சியுடன், “எங்க வீட்டில் இன்னும் நிறைய பழங்கள் இருக்கு அண்ணா, வாங்க…” என்று அழைத்தார்கள். அந்த சிரிப்பில் இருந்த தூய்மையும், அந்த மகிழ்ச்சியில் இருந்த நேர்மையும் என்னை ஆழமாகத் தொட்டது. அந்த வீடியோவைப் பார்த்த நொடியில், “இங்கே ஏதோ ஒரு அழகான உண்மை இருக்கிறது” என்று என் மனம் சொல்லியது.
அதன் பிறகு BCT பற்றி தேடிப் பார்த்தேன். மழை, வெயில், மலை, காடு எதையும் பொருட்படுத்தாமல் இயற்கைக்காக உழைக்கும் ஒரு குழுவை நான் அங்கே கண்டேன். நான் வாழ்க்கையில் செய்ய வேண்டும் என்று நினைத்த பல விஷயங்களை அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். அதனால் நந்தகுமார் அண்ணாவிற்கு ஒரு செய்தி அனுப்பினேன். இதற்கு முன் பல NGO-களுக்கு நான் செய்தி அனுப்பியிருக்கிறேன். பெரும்பாலும் சாதாரணமான பதில்களோ அல்லது அலட்சியமான பதில்களோதான் கிடைத்திருக்கின்றன. ஆனால் இங்கே வித்தியாசம் இருந்தது. ஒரு மனிதரை எப்படி மதிக்க வேண்டுமோ அப்படித்தான் பதில் வந்தது. அந்த பணிவு என்னை அவர்களிடம் இன்னும் நெருக்கமாக்கியது. சுமார் ஆறு மாதங்கள் தொடர்ந்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்.
பிறகு 18 ஜூலை 2025 அன்று, ஆழியார் அணையிலிருந்து வால்பாறை சாலையில் நடைபெறும் Clean Drive-இல் கலந்துகொள்ள முடியுமா என்று ஒரு செய்தி வந்தது. அந்தச் செய்தியைப் பார்த்த நொடி எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உடனே எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களான நவீன் மற்றும் திவாகர் தம்பியை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். அங்கே சென்றபோது பல நல்ல மனிதர்களை சந்தித்தேன். அவர்களில் பழனிசாமி அண்ணா என் மனதில் தனி இடம் பிடித்தவர். நந்தகுமார் அண்ணா எவ்வளவு பணிவாக இருந்தாரோ, பழனிசாமி அண்ணா அதைவிட அன்பாக இருந்தார். சில மனிதர்களைப் பார்த்தாலே மனதிற்கு ஒரு நிம்மதி கிடைக்கும்; அவர் அப்படிப்பட்டவர். அந்த நாளிலிருந்து வாரம் வாரமாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்தேன். என்னை மீண்டும் மீண்டும் அங்கே அழைத்துச் சென்றது காடு மட்டும் அல்ல, அங்கே இருந்த மனிதர்களின் மனசும் கூட.
அந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்றபோதுதான் BCT எனக்கு ஒரு அமைப்பு மட்டுமல்ல என்பதை உணர்ந்தேன். அந்தப் பயணத்தில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். வயதில் பெரியவர்கள், சிறியவர்கள், வெவ்வேறு துறைகளில் இருப்பவர்கள், வெவ்வேறு வாழ்க்கைப் பின்னணியில் இருந்து வந்தவர்கள் என பலரை சந்தித்தேன். ஆனால் எங்களுக்குள் இருந்த உறவு வெறும் நட்பைத் தாண்டியது. அதற்குக் காரணம் நந்தகுமார் அண்ணா. அவர் எங்களை ஒருபோதும் volunteers ஆகவோ, workers ஆகவோ பார்க்கவில்லை. ஒரு குடும்பமாகத்தான் பார்த்தார். ஒவ்வொருவரின் நலனிலும் அக்கறை காட்டுவார். களப்பணியில் இருந்தாலும், பயணத்தில் இருந்தாலும், சாப்பிடும் நேரமாக இருந்தாலும், அனைவரும் நன்றாக இருக்கிறோமா என்பதைக் கவனிப்பார். அந்த அன்பும், அந்த மரியாதையும், அந்த அரவணைப்பும்தான் BCT-யை ஒரு அமைப்பாக இல்லாமல் ஒரு குடும்பமாக மாற்றியது. இன்று நான் BCT நிகழ்ச்சிகளுக்குச் செல்வதற்குக் காரணம் இயற்கை மட்டும் அல்ல; அங்கே நான் கண்ட குடும்பமும் கூட.
தெங்குமரஹடாவில் நடைபெற்ற Seed Ball நிகழ்ச்சி என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது. முதல்முறையாக ஒரு விதைப்பந்தை கையில் எடுத்தபோது அது ஒரு சாதாரண விதையாகத்தான் தோன்றியது. ஆனால் அந்த பரந்த நிலப்பரப்பில் அதை வீசிய அந்த நொடி, என் உள்ளத்தில் ஒரு வித்தியாசமான உணர்வு பிறந்தது. அந்தக் காடு என்னைப் பார்த்து, “வா பாரதி,உனக்காக நான் காத்திருந்தேன்” என்று சொல்வது போல இருந்தது. பின்னர் அந்த இடங்களில் சீமைக்கருவேலம் அகற்றப்பட்டு, மீண்டும் இயற்கைக் காடுகளை உருவாக்குவதற்காக விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதை அறிந்தேன். அப்போது தான் ஒரு காடு அழிவது எவ்வளவு எளிது, ஆனால் ஒரு காடு மீண்டும் பிறப்பது எவ்வளவு கடினம் என்பதை புரிந்துகொண்டேன். அந்த நொடியில் ஒரு உண்மை எனக்கு தெளிவானது. நான் BCT-யில் சேரவில்லை; இயற்கையே என்னை BCT-யில் சேர்த்துவிட்டது.
அதன் பிறகு தெங்குமரஹடா, ஆசனூர், சத்தியமங்கலம் போன்ற பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். Seed collection, sapling plantation, forest restoration போன்ற பணிகளில் ஈடுபட்டபோது, ஒரு காடு என்பது வெறும் மரங்களின் கூட்டம் அல்ல; கோடிக்கணக்கான உயிர்களின் வீடு என்பதை உணர்ந்தேன். எந்த விதையை எந்த விலங்கு சாப்பிடுகிறது, எந்த மரம் எந்த உயிருக்கு நிழல் தருகிறது, ஒரு காட்டு அமைப்பில் ஒவ்வொரு உயிருக்கும் என்ன பங்கு இருக்கிறது என்பதையெல்லாம் கற்றுக்கொண்டேன். நந்தகுமார் அண்ணா ஒருமுறை சொன்ன ஒரு வார்த்தை இன்றும் என் மனதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது: “நாம் காட்டுக்காக என்ன செய்கிறோமோ அதைவிட, காடு நமக்குத் திருப்பிக் கொடுப்பது அதிகம்.” அந்த வார்த்தை வெறும் பேச்சாக இல்லை; நான் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அதை உணர்ந்தேன்.
சில மாதங்களுக்குப் பிறகு, நாங்கள் விதைகள் விதைத்த இடங்களுக்குச் சென்றோம். அங்கே புல் விதைகள் முளைத்திருந்தன. இலந்தை விதைகள் வளர்ந்திருந்தன. நாங்கள் நட்ட கன்றுகள் உயிரோடு நின்றிருந்தன. அந்த காட்சியைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. ஏனெனில் அங்கே வளர்ந்தது வெறும் மரங்கள் அல்ல; நம்பிக்கை. மனிதர்கள் செய்த சிறிய முயற்சிகளுக்கும் இயற்கை பதில் அளிக்கிறது என்பதை நான் அங்கே நேரில் பார்த்தேன்.
ஆனால் என் வாழ்க்கையை முழுமையாக மாற்றிய அனுபவம் இன்னும் வரவில்லை. அது ஒரு யானையின் Post-Mortem பணியில் பங்கேற்ற நாளில் வந்தது. அந்த உயிரற்ற யானையின் அருகில் நின்றபோது, நான் முதன்முறையாக இயற்கையின் வலியை நேரில் பார்த்தேன். அது வெறும் ஒரு யானை அல்ல. ஆயிரக்கணக்கான விதைகளை காட்டின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லும் உயிர். எண்ணற்ற மரங்களின் பிறப்புக்கு காரணமான உயிர். ஒரு முழு காட்டு சூழலியல் அமைப்பின் முக்கியமான அங்கம். அந்த உயிர் அங்கே அமைதியாக கிடந்தது. அந்தக் காட்சியைப் பார்த்தபோது என் மனம் உடைந்தது. நாம் சுவாசிக்கும் காற்றுக்கும், நாம் குடிக்கும் தண்ணீருக்கும், நாம் வாழும் இந்த பூமிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ உதவி செய்த ஒரு உயிர் என் கண்முன் உயிரற்ற நிலையில் கிடந்தது. அன்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அந்த யானையின் முகம் மீண்டும் மீண்டும் நினைவிற்கு வந்தது. அது அழுகையா, வலியா, வேதனையா என்று தெரியவில்லை. ஆனால் என் உள்ளத்தில் ஒரு குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது: “இன்னும் நிறைய வேலை இருக்கிறது பாரதி…”
அந்த நாளுக்குப் பிறகு நான் இயற்கையை வெறுமனே ரசிக்கவில்லை; இயற்கைக்காக வாழ ஆரம்பித்தேன். இன்று கூட காடுகளுக்குச் செல்லும்போது சிலர் பிளாஸ்டிக் குப்பைகளை வீசுவதைப் பார்க்கும்போது மனம் வலிக்கிறது. இன்னும் சிலர் விலங்குகளுக்கு உணவு கொடுப்பதை அன்பு என்று நினைத்து செய்கிறார்கள். ஆனால் அது அன்பு அல்ல. அது அந்த உயிர்களின் இயல்பான வாழ்க்கையை பறிப்பது. நாம் இயற்கையிடம் தினமும் காற்றையும், தண்ணீரையும், உணவையும் பிச்சை எடுத்துக்கொண்டு வாழ்கிறோம். ஆனால் அதே நாம் இயற்கைக்கே பிச்சை போட முயற்சிக்கிறோம். இந்த முரண்பாட்டை உணர்ந்தபோது மனிதனாகிய நம்முடைய பொறுப்பு எவ்வளவு பெரியது என்பதை புரிந்துகொண்டேன்.
இன்று BCT-யில் இருக்கும் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது, அவர்கள் தங்களுக்குக் கிடைத்த நேரத்தில் வருகிறார்கள் என்று நான் நினைப்பதில்லை. அவர்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரு வரத்தை வாழ்கிறார்கள் என்று நினைக்கிறேன். காட்டோடு சில மணிநேரங்கள் வாழும் வரம், ஒரு விதையை நட்டு எதிர்காலத்தை உருவாக்கும் வரம், ஒரு உயிருக்கு வாழ்வளிக்கும் வரம். நான் இன்று உறுதியாகச் சொல்கிறேன் — நான் BCT-யைத் தேர்ந்தெடுக்கவில்லை. காடுதான் என்னைத் தேர்ந்தெடுத்தது.
— இளம்பாரதி பத்மநாபன்
“வனம் நேசித்து வனம் காப்போம்; ஏனெனில் நாம் காடுகளை காப்பாற்றவில்லை, காடுகள்தான் நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன.”





